சென்னை:சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3 வழித்தடத்தில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது.
இந்தப் பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செல்லும் நான்காவது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லும் ஐந்தாவது வழித்தடமும் சென்னை ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இணைகிறது. இது இந்தியாவில் வேறு எங்கும் இதுவரை சாத்தியப்படாத, சவாலான இரண்டடுக்கு மெட்ரோ பாலமாக அமைய உள்ளது.
இந்த புள் டக்கர் மெட்ரோ பாலத்தில் ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், காரம்பாக்கம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்திற்கு நான்காம் வழித்தடமும் 70 அடி உயரத்தில் ஐந்தாம் வழித்தடமும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒரே தூணில் அமைகிறது. டபுள் டக்கர் மெட்ரோ பாலத்திற்கு மொத்தம் 608 கார்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த டபுள் டக்கர் பணிகள் வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள்ள மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4வது வழித்தடத்தில் போரூரிலிருந்து கோடம்பாக்கம் வரையிலான பாதையில் 8 நிலையங்கள் அமைகிறது. மேலும் 4 கிலோ மீட்டருக்கு டபுள் டக்கர் மேம்பாலம் அமைகிறது. இந்த டபுள் டக்கர் மேம்பாலத்தில் ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், கரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய நிலையங்கள் அமைகிறது. மேலும் 5வது வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் இந்த ரயில் நிலையங்களிலிருந்து 4வது வழித்தடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இந்த டபுள் டக்கர் பணியானது மிகவும் கடினமாக மேற்கொள்ளப்படுகிறது. குறுகிய சாலையில் பெரிய இயந்திரங்கள் பயன்படுத்துவது என்பது மிகவும் சிரமானது.
குறிப்பாக ஆற்காடு சாலை போன்ற மிக குறுகிய பாதையில் டபுள் டக்கர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சில தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் முடிக்கப்பட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆற்காடு சாலையில் காரப்பாக்கம் முதல் ஆலப்பாக்கம் வரை வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. அதேபோல், 4வது வழித்தடத்தில் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரும் டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post சென்னையில் 2026ல் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் மெட்ரோ: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.