திண்டிவனம்: பைக்கில் சென்ற தம்பதி மீது சொகுசு கார் மோதியதில் கணவன் பலியான நிலையில், மனைவி படுகாயம் அடைந்தார். விபத்துக்கு காரணமான ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கெங்கணந்தல் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (39). இவர், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர், மனைவி மீனா (31)வுடன் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோயிலுக்கு கடந்த 9ம் தேதி இரவு 8 மணியளவில் பைக்கில் சென்றுள்ளார்.
திண்டிவனம் அடுத்த ஓங்கூர் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த நாராயணசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மனைவி மீனா அச்சிரப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் ஓங்கூர் சுங்கச்சாவடியை கடந்த வாகனங்களை ஆய்வு செய்ததில் ஒரு வாகனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டு அந்த நேரத்தை கண்காணித்ததில் மேற்குவங்க மாநில பதிவெண் கொண்ட சொகுசு காரை அடையாளம் கண்டனர். இதில் விபத்து ஏற்படுத்தியது சென்னை ஏ.ஜி.எஸ். நகரை சேர்ந்த அரவிந்த் (32) என்கின்ற தொழிலதிபர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உறவினர் என்றும் அரவிந்த் அம்மாவின் சித்தி மகள் தான் நிர்மலா சீதாராமன் என்று கூறியதாக கூறப்படுகிறது. விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற நபரை தீவிர தேடுதல் வேட்டையின் அடிப்படையில் கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
The post சென்னையில் இருந்து மேல்மலையனூர் கோயிலுக்கு பைக்கில் சென்ற தம்பதி மீது கார் மோதி கணவன் பலி: ஒன்றிய அமைச்சரின் உறவினர் கைது appeared first on Dinakaran.