சென்னை: உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள் பங்கேற்கும் உலக தொழில்முனைவோர் விழா சென்னையில் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை ஃப்ரீலேன்ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்கர்ஸ் ட்ரைப் சார்பில், தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் இவ்விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. சர்வதேச அளவிலான தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனத்தினர், நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரைக் கொண்டாடும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.
இதில், பல்வேறு நாடுகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனத்தினர் (ஸ்டார்ட்-அப்) பங்கேற்கின்றனர். விழாவில், கலந்துரையாடல், மாநாடு, கருத்தரங்கம், பயிலரங்கம், கண்காட்சி, சிறந்த தொழில்முனைவோருக்கு விருது வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மேலும், 100-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர்.