சென்னை: கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். அதேவேளையில், மாநகரப் பேருந்துகளும், மெட்ரோ ரயில் சேவையும் கைகொடுத்தன.
மின்சார ரயில் சேவை பாதிப்பு: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்து, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை சனிக்கிழமை காலை தாமதமாக தொடங்கினாலும் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டன. இதேபோல, சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மார்க்கங்களில் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.