
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்ததால் செங்கை, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 100 கன அடி உபரிநீர் மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டு வருவதால் யாரும் அடையாறு ஆற்றுக்குள் இறங்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது என்று நீர்வளத் துறையினரும் மாவட்ட நிர்வாகத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏரி மொத்தம் 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகவும், அதன் நீரின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் அலுவலர்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை நீரை அளவீடு செய்து வருகின்றனர். மேலும், தற்போது அதிகப்படியான நீர் வந்து கொண்டிருப்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்பு நேற்று மாலை மதகுகளின் வழியே 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

