சீனா: செயற்கை நுண்ணறிவு நுட்பத்துறையில் முன்னணி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சீனாவின் டீப்சீக் ஏஐ டூல் முதலிடம் பிடித்திருப்பதால் அமெரிக்க ஏஐ நிறுவனங்கள் ஆச்சரியமும் அதே நேரத்தில் அதிர்ச்சியும் அடைந்துள்ளன. டீப்சீக் ஆர் ஒன் இந்த பெயர் சமீபத்தில் அமெரிக்காவின் ஏஐ துறை ஜாம்பவான்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக மாறியுள்ளது. பல ஆயிரம் கோடி முதலீட்டில் கூகுள், மெட்டா, எக்ஸ் போன்ற தொழில் நுட்ப நிறுவனங்களும் சாட் ஜிபிடியின் தாய் நிறுவனமாக ஓபன் ஏஐயும் பல ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் வகித்துவந்த ஆதிக்கத்தை ஒரு சில ஆண்டுகளில் தகர்த்துள்ளது சீனாவின் டீப்சீக்.
சீன தொழிலதிபர் லியாங்கின் ஐ பிளயர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் கடந்த 2023ல் டீப்சீக் என்ற ஏஐ அடிப்படையிலான டூலை தயாரித்து புழக்கத்திற்கு கொண்டுவந்தது. இந்த சூழலில் தான் ஏஐ உலகில் முன்னோடியாக உள்ள சேட் ஜிபிடியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது டீப்சீக் ஆர் ஒன். டீப்சீக் கோடர், எல்.எல்.எம், வி 2, வி3 மற்றும் டீப்சீக் ஆர் ஒன் ஆகிய அடுத்தடுத்த பதிப்புகளால் கவரப்பட்ட ஏஐ விரும்பிகள் அவற்றை அதிகளவில் பதிவிறக்கம் செய்ததால் ஆப்பிள் ஆஃப் ஸ்டோரில் டீப்சீக் ராக்கெட் வேகத்தில் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளது.
சாட் ஜிபிடி, கூகுள், ஜெமினி உள்ளிட்ட ஏஐ டூல்களின் அதிநவீன வசதிகளை பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டும் ஆனால் டீப்சீக் ஆர் ஒன் ஏஐ டூல் மலிவான விலையில் மிக சிறப்பான வசதிகளை வழங்குவதால் மளமளவென முன்னேறி முதலிடத்தை பிடித்திருக்கிறது என்கின்றனர் அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்கள். அமெரிக்க நிறுவனங்களுக்கு சவால்விடுக்கும் வகையில் சீனாவின் டீப்சீக் டூல் புதிய விஸ்வரூபம் எடுத்துள்ளதால் முன்னணி ஏஐ நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அதே நேரம் சில மாதங்களில் உருவாக்கப்பட்ட சீன ஏஐ டூல் எப்படி சாட் ஜிபிடியின் தரத்தை எட்டியது என்றும் அவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சீனாவால் குறைந்த செலவில் தரமான ஏஐ நுட்பத்தை வழங்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் டீப்சீக்கின் போட்டியை சமாளிக்கும் திட்டம் குறித்து அமெரிக்க ஏஐ நிறுவனங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. வலைத்தளம் மற்றும் செயலி வடிவில் பயன்படுத்தும் வகையிலான டீப்சீக் டூல் கடந்த 8 ஆம் தேதி இந்தியாவிலும் அறிமுகமானது என்பதுடன் இதனை தமிழிலும் பயன்படுத்தமுடியும் என்பது சிறப்பு. ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்கா நிறுவனங்கள் மட்டுமே அதிகம் செலுத்தி வந்த நிலையில் தற்போது சீனாவின் டீப்சீக்க்கும் களத்தில் இருப்பது ஏஐ நுட்பத்தில் போட்டியை அதிகரித்துள்ளது.
The post செயற்கை நுண்ணறிவு நுட்பத்துறையில் முன்னணி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சீனாவின் டீப்சீக் ஏஐ டூல் முதலிடம்..!! appeared first on Dinakaran.