சென்னை: செய்தித் துறையின் 2025-26 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளைப் படித்து அகம் மகிழ்ந்தேன் என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறுகையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் 2025-26 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளைப் படித்து அகம் மகிழ்ந்தேன். 1947 ஆம் ஆண்டுக்கு முன்னதாக தி சு அவினாசிலிங்கமால் தொடங்கப்பட்ட ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ தொய்வின்றித் தமிழ்ப் பணியாற்றுவதற்கு உதவியாகத் தமிழ்நாடு அரசு ரூ 2 கோடி வைப்புத் தொகையாக அளித்திருக்கிறது.
இது காலத்தினால் செய்த உதவி; ஞாலத்தின் மாணப் பெரிது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. முதலமைச்சருக்கும், இந்தத் தொகையை மனமுவந்து வழங்கிய தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் மு. பெ. சாமிநாதனுக்கும், இதற்குப் பெரும் துணையாக இருந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் முனைவர் ம. இராசேந்திரன் அறங்காவலர் குழுவின் தலைவர் என்ற முறையில் நானும் மனம் மகிழ்ந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
The post செய்தித் துறையின் 2025-26 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளைப் படித்து அகம் மகிழ்ந்தேன்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.