சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டி.குகேஷ். இதன் மூலம் அவர், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். மேலும் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் தாயகம் திரும்பினார். இந்நிலையில் நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் உலக செஸ் சாம்பியனான குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குகேஷை ஊக்குவிக்கும் விதமாக ரூ.5 கோடியை ஊக்கத் தொகையாக வழங்கினார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், எம்.ஏல்.ஏக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் குகேஷ், உலக சாம்பியன்ஷிப்பில் பெற்ற வெற்றி கோப்பையை முதல்வரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.