சேலம்: சேலம் உழவர் சந்தையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் சேவையை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சேலம், சூரமங்கலம் உழவர் சந்தை தொடங்கி வைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வேளாண்மைத் துறையின் சார்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.19.25 இலட்சம் மதிப்பிலான உழவர் சந்தை அடையாள அட்டை, உட்கட்டமைப்பு நிதி மற்றும் உயிர் உரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சூரமங்கலம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், உழவர்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்கள்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் தி.மு.க., அரசு செய்யவில்லை என்று பா.ம.க., குற்றம்சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது: அதை சொல்லாவிட்டால் அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்க முடியாது. நீங்களே பாருங்க. எங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எங்களை பாராட்டுவார்கள். நேரடியாக அவர்களுக்கு தெரிகிறது. தமிழக அரசின் பலன்கள் புரிகிறது. விவசாயிகளாக இருப்பதால், அவர்களுக்கு தெரிகிறது.
நான் புள்ளி விபரத்தோடு சொல்லிட்டேன். ஏனெனில் இது கணக்கு வழக்கு. இதற்கென ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், செயலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் சட்டசபையில், அமைச்சராக இருக்கும் நாங்கள், பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு பணம் என்பதை படிக்கிறோம். ஆடிட் ஜெனரல் ஆண்டாண்டுக்கு கணக்கு வழக்கு பார்க்கிறார்கள். இதன் காரணமாக நிதி ஒதுக்குறோம். நிதி ஒதுக்கப்படவில்லை என்றால், மனசாட்சியை விற்று விட்டு பேசுகிறார்கள். மனசாட்சி இருந்தால், இந்த அரசை பாராட்டுவார்கள், எனக் கூறினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி மேயர், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர், சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர், தோட்டக்கலை துணை இயக்குநர், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
The post சேலம் உழவர் சந்தையில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தின் சேவையைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு! appeared first on Dinakaran.