*சீசன் களை கட்டியது
சேலம் : உச்சக்கட்ட சீசன் என்பதால், சேலம் சரகத்தில் உள்ள குடோன்கள், கடைகளுக்கு மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு மாங்காய் வரத்து நல்லமுறையில் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
உலகளவில் 40 சதவீதம் மாங்காய் உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விருதுநகர், தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, நடுசாளை, குண்டு, இமாம்பசந்த், நீலம் உள்பட பல வகையான மாம்பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் மா மரங்களில் பூ பூக்கும். ஏப்ரல் முதல் வாரத்தில் மாங்காய் விளைச்சல் தரும். கடந்தாண்டு பெய்த மழையால் விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் மாங்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. தற்போது உச்சக்கட்ட சீசன் என்பதால் சேலம் சரகத்தில் உள்ள குடோன், கடைகளுக்கு மாங்காய் வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழம் வியாபாரிகள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விளைச்சல் உள்ளது. கடந்தாண்டு அனைத்து பகுதிகளிலும் மழை கைக்கொடுத்துள்ளதால் மாமரங்களில் மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மாங்காய் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மார்க்கெட்டுக்கு குண்டு, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாலை, மல்கோவா, பங்கனப்பள்ளி உள்பட பல ரக மாங்காய் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. சேலம் மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட மாங்காய் மொத்த வியாபாரிகள் உள்ளனர். இங்குள்ள குடோன் மற்றும் கடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 டன் மாங்காய் விற்பனைக்கு வருகிறது.
இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச்சென்று வியாபாரம் செய்து வருகின்றனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளில் சாலையோரம் மாம்பழம் குவித்து வியாபாரம் செய்கின்றனர்.குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் வியாபாரிகள் டன் கணக்கில் மாம்பழத்தை குவித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இன்னும் ஒரு மாதத்திற்கு மாம்பழம் சீசன் களைகட்டும். ஜூன் 30ம் தேதிக்கு மேல் சீசன் குறையும். ஜூலை கடைசியில் மாம்பழம் சீசன் முடியும். ஒரு கிலோ மாம்பழம் ரகத்தை பொறுத்து ₹80முதல் ₹150 வரை விற்கப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
சென்னை,பெங்களூருக்கு அதிகளவில் ஆர்டர்கள்
‘‘சேலம் மார்க்கெட்டுக்கு சேலம் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரியில் இருந்து மாங்காய் விற்பனைக்கு வருகிறது. இவ்வாறு விற்பனைக்கு வரும் மாம்பழம் 75 சதவீதம் உள்ளூர் விற்பனைக்கும். மீதமுள்ள 25 சதவீதம் துபாய், மலேசியா, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைதவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
நடப்பாண்டு சீசன் தொடங்கியதில் இருந்தே மாம்பழத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, பெங்களூரில் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் குவிகிறது. அவ்வப்போது பார்சல் செய்து கூரியர் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் முகவரிக்கு அனுப்பி வருகிறோம்,’’ என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post சேலம் சரகத்திலுள்ள குடோன்களுக்கு தினமும் விற்பனைக்கு வரும் 30 டன் மாங்காய் appeared first on Dinakaran.