சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-1-ல் அமைந்துள்ள சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த வணிக மேம்பாட்டிற்கான கட்டுமான ஒப்பந்தம் B & B Developers and Builders நிறுவனத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் (LOA) B & B Developers and Builders நிறுவனத்திற்கு 09.10.2024 அன்று வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் தி.அர்ச்சுனன் மற்றும் B & B Developers and Builders நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சி.பாபி பெனடிக்ட் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள்ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ஆர்.முரளி, (நிதி), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஆலோசகர் குழுக்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனது நிலச் சொத்துக்களின் முழுமையான பயன்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களுக்காக எடுக்கப்பட்ட இடங்களில் வணிக வளர்ச்சிக்கான முக்கிய இடங்களைக் கண்டறிந்து பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியில் இன்று (11.12.2024) சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே வணிக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கான ஒப்பந்தம் இன்று வழங்கப்பட்டுள்ளது.
The post சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே வணிக வளாகம் கட்ட ரூ.33 கோடி மதிப்பில் ஒப்பந்தம் appeared first on Dinakaran.