லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில், ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சகநாட்டைச் சேர்ந்த உன்னதி ஹுடாவை எதிர்த்து விளையாடினார். 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சிந்து, சீனாவின் லுவோ யு வுடன் மோதுகிறார். லுவோ அரை இறுதி சுற்றில் 21-19, 21-12 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் லாலின்ராட் சாய்வானை தோற்கடித்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் சூஜி ஹோங், யாங் ஜியா யீ ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 18-21, 21-18, 21- 10 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் பென்யப்பா எய்ம்சார்டு, நுன்டக்ரன் எய்ம்சார்டு ஜோடியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.