*விவசாயிகள் கோரிக்கை
நாகப்பட்டினம் : ஜூன் 12ம்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால், வடிகால்கள், நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்தது.
ஒளிச்சந்திரன்: வேதாரண்யம் பகுதிகளில் மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் பாதிக்கப்படும் தோட்டக்கலை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
பாஸ்கரன்: தலைஞாயிறு பகுதிகளில் பருப்பு வகை மற்றும் எல் சாகுபடி பயிர்கள் கால்நடையிலிருந்து காப்பாற்ற நிரந்தரமாக கால்நடை பட்டிகள் அமைக்க வேண்டும்.
தமிழ்ச்செல்வன்: சம்பா அறுவடை பணிகள் 10 நாட்களில் முடிய உள்ள நிலையில் வரும் ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நாகை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வடிகால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர் வரவேண்டும்.
பிரகாஷ்: நாகை மாவட்டத்தில் நெற்பயிரினை தொடர்ந்து, பயிரிடப்படும் உளுந்து பயிர் வளர்ச்சிக்கு இழைவழி ஊட்டச்சத்து தெளிப்பதற்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வேளாண் உபகரணங்கள் பெற்ற விவசாயிகளுக்கு கிடைக்காமல் உள்ள மானியத்தை விரைவாக பெற்று தர வேண்டும்.
விவசாயிகளிடமிருந்து கையூட்டு பெறாமல் நெல் கொள்முதல் செய்யக்கூடிய திட்டமான நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டும்.
சுரேஷ்குமார்: தலை ஞாயிறு ஒன்றியம் ஆய்வு ஊரில் மின் இறவை பாசனம் 1- ல் கரை உடைப்பு ஏற்படுத்துவதால் அதில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும். பெருமழை கோட்டகம் கிளைவாய்க்காலை தூர்வார வேண்டும்.
கண்ணன்: தலைஞாயிறு பகுதியில் உள்ள அரிச்சந்திரா நதியில் இருந்து கடல் நீர் நன்னீரில் கலப்பதை தடுக்க ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் கட்டப்பட்ட ரெகுலேட்டரில் நிரந்தர கரைக்காப்பாளர் நியமிக்க வேண்டும்.
முஜிபு செரிக்: வெள்ளப்பள்ளத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். வேதாரண்யத்தில் மத்திய வேளாண்மை தென்னை ஆராய்ச்சி மையத்தின் கிளையை அமைக்க வேண்டும் என பேசினர்.
The post ஜூன் 12ம்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு வடிகால்கள், நீர்நிலைகளை தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.