காத்மாண்டு: நமது அண்டை நாடான நேபாளத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர் அந்நாட்டின் ஜென் Z தலைமுறையினர். சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினர் என்று வரையறுக்கப்படுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகமெடுத்த காலத்தில் பிறந்த இவர்கள் சமூக வலைதள ஆப்களை உணர்வுபூர்வமாகவும் அணுகுபவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், நேபாளத்தில் இந்த ஜென் Z தலைமுறையினர், இன்று மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில், தலைநகர் காத்மாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளான பொக்காரா, புட்வால், தாரன், கோரஹி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் போலீஸாரை திக்குமுக்காட வைத்தனர்.