சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழாவில் நேற்று பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா உள்ளிட்டோர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் நடைபெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் மு.பா.அன்புச்சோழன் ஆகியோர் பங்கேற்று, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.