சென்னை: “அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திலும் இப்போது துரோகத்தை திமுக அரசு செய்கிறது. அரிட்டாப்பட்டி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடத்தை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபுறம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி விட்டு, இன்னொரு புறம் அதை எதிர்ப்பது போல, திராவிட மாடல் அரசு நடத்தும் பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.