சென்னை: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு தமிழக அரசு சார்பில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தமிழக இயற்கை வளங்கள் துறை தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தை சேர்ந்தது இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம். இந்த நிறுவனம், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலத்தை ஏலம் எடுத்துள்ளது.