
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் இன்று (அக்.18) மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAB) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 36-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இது குறித்து பேசிய டாக்கா தீயணைப்பு சேவை செய்தித் தொடர்பாளர் தல்ஹா பின் ஜாசிம், “பிற்பகல் 2:30 மணிக்கு எங்களுக்குத் தகவல் கிடைத்தது, உடனடியாக விமான நிலையத்தில் தீயணைப்பு பணிகளுக்காக வாகனங்களை அனுப்பினோம்” என்று கூறினார்.

