சென்னை: டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள், வீடுகளில் அமலாக்கத்துறை தொடந்து நேற்று இரண்டாவது நாளாக சோதனை செய்தனர். தமிழக அரசின் டாஸ்மாக் (தமிழ் நாடுமாநில வாணிபகழகம்) நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெறுவதாகவும், இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறைக்கு புகார் சென்றது. அந்த புகாரின் பேரில், கடந்த மாதம் மார்ச் 6ம் தேதியிலிருந்து 3 நாள்கள் சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், பார் உரிமங்கள் வழங்குதல், அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குதல், டெண்டர் விடுதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும்,மதுபானம் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 30 வரை அதிகமாக விற்கப்படுவதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள், மதுபான நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
மேலும்,டாஸ்மாக் மூலம் அரசு கணக்கில் சேராமல் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இது குறித்து அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விளக்கமளித்துப் பேசியிருந்தார். அதில், எந்தவித முகாந்தரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட ரைடு எந்த ஆண்டு பதியப்பட்ட, எந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறவில்லை. கடந்த 4 ஆண்டிகளில் பார் டெண்டர் முழுவதும் ஆன்லைன் டெண்டராக மாற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் பொதுவாக சொல்லியிருக்கும் 1000 கோடி முறைகேடு என்பது எந்த முகாந்திரமும் இல்லாமல் பொத்தாம்பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. என அமலாக்கத்துறைக்கு எதிராக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. அதிலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன் தினம் காலை முதல், மணப்பாக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் ஒருவர் வீட்டிலும், தேனாம்பேட்டை, தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா சாலை, பெசன்ட் நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டனர்.குறிப்பாக டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள், காண்ட்ராக்டர், டாஸ்மாக் தொடர்பாக சோதனை செய்யும் அதிகாரிகளின் நண்பர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை நடந்து கொண்டிருந்தபோதே விசாகன் வீடு அருகே சாலையோரத்தில் வாட்ஸ் ஆப் சேட்களின் ஸ்கிரீன் ஷாட் ஆவணங்கள் சிதறிக்கிடந்தன.ஆவணங்கள் சிதறிக்கிடந்த இடத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர். அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றபோது விசாகன் மகன் வீட்டில் இல்லாத நிலையில், அவரை அழைத்து வீட்டில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாகன் பயன்படுத்தும் லேப்டாப்புகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், வங்கி அதிகாரி ஒருவரின் துணையுடன் பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாகன் மற்றும் அவரது மகனிடம் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.இதனையடுத்து விசாகனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர். சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக வீட்டில் விசாரணை நடந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக விசாகனிடம் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாகனின் மனைவியும் அழைத்து செல்லப்பட்ட நிலையில், வெளியே காக்க வைத்த அதிகாரிகள் அவரை விசாரிக்காமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பிற்பகல் 3.45 மணிக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு 5 மணி நேரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. குறிப்பாக அவர் உபயோகித்த லேப்டாப்களை திறக்க சொல்லி அதில் உள்ள ஆவணங்கள் குறித்து கேட்டனர்.பின்னர் இரவு 8.45 மணி அளவில் அவரை மீண்டும் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நேற்று அதிகாலை முதல் மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 30 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தப்பட்ட நிலையில், விசாகன் மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேற்று அழைத்து செல்லப்பட்டார். சுமார் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது, சோதனையில் கைப்பற்றப்பட்ட டெண்டர் குறித்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலதிபர் வீட்டுக்கு பூட்டு
டாஸ்மாக் வழக்கில் ரத்தீஷ் என்ற தொழிலதிபரின் எம்ஆர்சி நகரில் உள்ள வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் சோதனை செய்ய சென்றனர். அப்போது இவர் வீடு திறந்திருந்தது., ஆனால் வீட்டில் இவர் இல்லை. ஆனாலும்,அமலாக்கத்துறையினர் இரவு 10 மணி வரை சோதனை செய்தனர். வழக்கமான முறைப்படி, ஒரு வீட்டில் சோதனை நடத்தினால், அந்த வீட்டை பூட்டு போட்டு விட்டு சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள். அந்த நடைமுறைப்படி இவர் வீட்டிற்கு பூட்டு போடப்பட்டு சாவி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. அமலாக்கத்துறையினர் வருவதற்கு சற்று முன்னர் தான் அவர் வீட்டிலிருந்து சென்றுள்ளார். இதனால் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் இவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் உள்ளனர். ஏனென்றால் டாஸ்மாக் எம்டி விசாகனின் செல்போனை ஆய்வு செய்ததில், விசாகன் ரத்தீஷீடம் அதிக நேரம் பேசியது கண்டறியப்பட்டது.
தயாரிப்பாளர் வீட்டிலும் 2வது நாளாக சோதனை
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்க துறை சோதனை நடத்தினர். தேனாம்பேட்டை, கேபி.தாசன் சாலையில் உள்ள இவரது அபார்ட்மென்டில் நேற்று முன் தினம் காலை 6.15 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இது, எதற்காக நடத்தப்பட்டது, எந்தெந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. 2வது நாளாக நேற்றும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். இதே போல், மின்வாரிய முன்னாள் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன் வீடு மற்றும் அலுவலகத்திலும், சூளைமேட்டில் உள்ள வீடு, அண்ணா நகரில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம், பெசன்ட் நகர் பகுதியில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமார் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தினர்.
The post டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 30 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை: டெண்டர் குறித்தான ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை appeared first on Dinakaran.