சென்னை: டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டுவோம் என்றும் இனி தமிழகத்தில் காவல் துறையை தூங்க விடமாட்டோம். டாஸ்மாக் விவகாரத்தில் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின்தான் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை கைது செய்த போலீஸார், 10-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் அடைத்தனர். இந்நிலையில், மாலை 6 மணி கடந்தும் விடுவிக்காததால், போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலிகிராமத்தில் பாஜக பெண் நிர்வாகி மயங்கி விழுந்த நிலையில் அவரை தமிழிசை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதேபோல், அண்ணாமலையும் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 7 மணிக்கு பிறகு பாஜகவினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.