நாமக்கல்: “தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எல்லாம் தோல்வி. டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதேநேரத்தில், டெல்லி தேர்தலில் பாஜக வெளியிட்டுள்ள ‘இலவச’ வாக்குறுதிகள் குறித்து நழுவலுடன் மழுப்பலாகவே கருத்து சொன்னார் அண்ணாமலை.
திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியது: “பாஜக உண்மையான ஜனநாயக கட்சி. 33 மாவட்ட தலைவர்கள் அறிவித்துள்ளோம். மீதமுள்ள மாவட்டங்களுக்கு விரைவில் அறிவிப்பு வரும். பாஜக வளர்ச்சி வேகமாக உள்ளது. முதல் கட்டமாக 48 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முழு நேரமாக வேலை செய்ய தீவிர உறுப்பினர்கள் 55 ஆயிரம் பேர் பாஜகவில் உள்ளனர். மாநில தலைவர் தேர்தல் முடிந்த பிறகு 2-ம் கட்ட உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்.