சென்னை: கடந்த 2012ம் ஆண்டு ஜூனியர் விகடன் வார இதழின் கேள்வி பதில் பகுதியில், டி.ஆர்.பாலு எம்.பி., சேது சமுத்திரத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், திமுக செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்திக்கு எதிராக பேசியதாகவும் அவதூறு செய்தி வெளிவந்தது. இதையடுத்து, டி.ஆர்.பாலு , ஜூனியர் விகடன் இதழுக்கு எதிராக 2014ம் ஆண்டு சிவில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்திகள் முழுக்க அவதூறு மற்றும் ஆதாரமற்றவை. எனவே, தன்னைப் பற்றியோ தனது குடும்பத்தினரை பற்றியோ செய்திகளை வெளியிட ஜூனியர் விகடனுக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஜூனியர் விகடன் நாளிதழுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டி.ஆர்.பாலு தொடர்பான செய்திகள் வெளியிட ஜூனியர் விகடன் வார இதழுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. டி ஆர்.பாலு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் டி.ஆர்.பாலுவுக்கு நஷ்ட ஈடாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஜூனியர் விகடன் வார இதழுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post டி.ஆர்.பாலு குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட விவகாரம் ஜூனியர் விகடன் வார இதழ் ரூ.25 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும்: ஐகோர்ட்உத்தரவு appeared first on Dinakaran.