* பகலில் வெளியில் வர மக்கள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைக்கு முன்பாகவே வெயில் கொளுத்தி எடுத்து வருவதால், பகல் நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரவில் கடும் பனியும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். வழக்கத்திற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் இயற்கை குளிர்பானங்களான தர்பூசணி, பழச்சாறு, இளநீர் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. திண்டுக்கல்லில் பல இடங்களில் தர்பூசணி விற்பனை செய்யும் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.
தர்பூசணியை பொறுத்த வரையில் கடந்த ஆண்டைவிட தற்போது விலை அதிகமாகவே காணப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.காலை 11 மணிக்கே வெயிலின் கொடுமையை தாங்க முடிவதில்லை. இதன், காரணமாக பொதுமக்கள் கம்பங்கூழ் கடைகளிலும், ஜூஸ் கடைகளிலும் குவிந்து வருகின்றனர்.வெளியே வருவதை தவிர்க்கலாம்
தமிழ்நாட்டில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு வெயில் உச்சத்தில் இருந்தது. ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் வெப்பநிலை உச்சக்கட்டத்தில் இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தமிழ்நாட்டில் பல இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடந்து பதிவாகி இருந்தது.
அந்த வகையில் இந்தாண்டும் கோடையின் தொடக்கத்திலேயே வெப்பம் கொளுத்தி எடுத்து வறண்ட வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே வரவேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியவர்கள் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள் என்பதால் தேவையின்றி வெளியே வர வேண்டாம். இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கும் முன்பே பிப்ரவரியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயில் காலங்களில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே வெயிலால் சுருண்டு விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு தமிழகத்திலும் வெயிலை சமாளிக்க முடியாமல் சிலர் இறந்துள்ளனர். அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், இனிவரும் காலங்களில் வெயிலின் அளவு அதிகரிக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
வெயிலை சமாளிக்கும் வழி
வெயிலில் இருந்து காத்துக்கொள்ள கீழ்கண்ட உணவுப் பொருட்களை அனைவரும் கண்டிப்பாய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
*மோர்: மிக அளவான உப்பு சேர்த்து ஓரிரு க்ளாஸ் மோர் அருந்துவது கோடையிலிருந்து உங்களை வெகுவாய் பாதுகாக்கும். இஞ்சி, சீரகம், பெருங்காயம், கொத்தமல்லி, கறுவேப்பிலை சேர்த்து சுவையினையும், ஆரோக்கியத்தினையும் கூட்டிக் கொள்ளலாம்.
*வெள்ளரி: 95 சதவீத நீர் சத்து கொண்டது. இதனை பச்சையாகவோ ஜூசாகவோ எடுத்துக் கொள்ளலாம். கொழுப்பு சத்து இல்லாதது. குறைந்த கலோரி சத்து கொண்டது. ஸ்ட்ரெஸ் வெள்ளரி எடுத்துக் கொள்ளும் போதும் குறையும்.
*கம்மங்கூழ்: தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவில் கம்பு கூழும் பிரசித்தம். இரும்பு, கால்ஷியம், வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்தது. இதனைக் குடித்துத்தான் நம் முன்னோர்கள் ஏசி இல்லாமல் இயற்கையிலேயே குளு குளு வென்று இருந்தார்கள். நோய், வெயில் கொடுமை இவற்றிலிருந்து தப்பிக்க இவ்வகை உணவுகள் பெரிதாய் உதவும்.
கரும்பு சாறு
இதனை வாங்கும் பொழுது சுகாதாரமான தாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். கரும்பு சாறு, இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து தரப் படும் பொழுது சிறுநீர் பாதையில் ஏற்படும் பாதிப்பினை வெகுவாய் தவிர்த்து விடுகின்றது.
புதினா சாறு
இது உடலில் கட்டிகள், வேர்குரு தோன்றுவதை தவிர்க்கும்.
நுங்கு: இதனை ஐஸ் ஆப்பிள் என்பர் அந்த அளவு குளிர்ச்சியினை உடலுக்குத் தர வல்லது.
நெல்லிக்காய்: இதனை சிறிதளவு ஜூஸாகவே தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
நன்னாரி
இதனை ‘சர்பத்’, என்ற முறையிலே எடுத்துக் கொண்டால் உடலை நீண்ட நேரம் ‘ஜில்’லென வைத்திருக்கும்.
மாங்காய்: இந்த காலத்தில் கிடைக்கும் மாங்காய், மாம்பழங்களை நன்றாக சாப்பிடுங்கள். அதிலும் மாம்பழம் அநேக சத்துகளைத் தன்னுள் கொண்டது.
The post டிரைலருக்கே கண்ணு கட்டுதே… மெயின் பிக்சர் தாங்குமா… பிப்ரவரியிலேயே மண்டையை பிளக்கும் வெயில்: குளுகுளுனு இருக்க வழி இருக்கு appeared first on Dinakaran.