கோவை: சொத்து வரி விதிப்புக்கு டிரோன் சர்வே ரத்து செய்யப்படும், ஏற்கனவே டிரோன் சர்வே செய்து விதிக்கப்பட்ட கூடுதல் சொத்து வரி ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு , செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், முத்துசாமி, கயல்விழி, மதிவேந்தன், ராஜேந்திரன், தமிழக அரசு கொறடா இளித்துறை ராமச்சந்திரன், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பெரிய நகரங்களில் சொத்து வரி விதிப்புக்கு டிரோன் சர்வே நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், டிரோன் சர்வே என்பதை முதல்வர் நிறுத்த சொல்லிவிட்டார், சொத்து வரி, அபராத வரி என்று சொல்லுவதற்கு காரணம் என்னவென்றால், குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக செலுத்திவிட்டால் இதற்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைத்துக்கொள்கிறோம். அதேபோல், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு செலுத்துபவர்களுக்கு அபராதம் வசூலிக்கிறோம். தற்போது, முதல்வர் அதையெல்லாம் நிறுத்த சொல்லிவிட்டார். இனி மேல், வரி மட்டும்தான் வசூல் செய்வோம்.
ஏற்கனவே டிரோன் சர்வே செய்து, விதிக்கப்பட்ட கூடுதல் வரி ரத்து செய்யப்படும். ஏற்கனவே அமலில் உள்ள 6 சதவீத வரி உயர்வு மட்டும் தொடர்ந்து அமலில் இருக்கும். கோவை மாநகராட்சியுடன், சில உள்ளாட்சி அமைப்புகள் இணைய எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுகிறார்கள். அது, தவறு. இணைப்பு பகுதி மக்களுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும். கிராமங்களில் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லை. விவசாய பகுதிகள் மொத்தமாக கட்டிட பகுதிகளாக மாறி வருகிறது. அதனால்தான், ஊராட்சிகளை இணைக்கிறோம். கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் இருந்து சேரிக்கப்படும் குப்பைகளை முறையாக கையாளவும், இதிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் அரசிடம் திட்டம் உள்ளது. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
* தமிழகம் முழுவதும் கூடுதல் அறிவுசார் மையங்கள்
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் எந்தெந்த அளவில் நடந்து முடிந்துள்ளது என முழுமையாக ஆய்வு செய்வதற்காக இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் கட்டப்பட்டுள்ளது. இது, மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. அதனால், இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என்றார்.
The post `டிரோன் சர்வே’ ரத்து செய்யப்படும் கூடுதல் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.