சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் நாளை (சனிக்கிழமை) டெல்லி கேபிடல்ஸ் அணி உடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
நடப்பு சீசனில் மூன்று ஆட்டங்களில் விளையாடி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை தழுவி உள்ளது சிஎஸ்கே. டெல்லி உடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை பகுதியில் காயமடைந்தார். அந்த ஆட்டத்தில் அவர் அரை சதம் பதிவு செய்தார். இருப்பினும் இரண்டு நாட்கள் அவர் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.