புதுடெல்லி: டெல்லி அரசினை துஷ்பிரயோகம் செய்தே பாஜக தேர்லில் வாக்கு கேட்கிறது என்று விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட டெல்லி உள்கட்டமைப்புக்கான இரண்டு மைல்கல் திட்டங்கள் மத்திய அரசு மற்றும் டெல்லி நகர நிர்வாகத்தின் கூட்டு முயற்சி என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், தன்மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், " ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து கலகம் மட்டுமே செய்கிறது என்று கூறுபவர்களுக்கான பதிலே இன்றையத் திட்டங்களின் திறப்பு விழாக்கள். அவர்கள் எங்களின் தலைவர்களை சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால் எங்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களை நாங்கள் பிரச்சினையாக்கவில்லை. நாங்கள் மக்களுக்காக உழைத்தோம். இல்லையென்றால் இந்தத் திட்டங்கள் வந்திருக்காது.