புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு, உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் அதே நாளில்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப். 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜன.10-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜன.17. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜன.18-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஜன.20 ஆகும். இதில் பதிவான வாக்குகள் பிப்.8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.