புதுடெல்லி: டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில், நேற்று டெல்லி முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி வீட்டில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். புதிய முதல்வரை தேர்வு செய்ய முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத், பாஜக தேசிய செயலாளர் ஓம் பிரகாஷ் தன்கட் ஆகியோர் மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.