மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை டெல்லி செல்லவிருந்த ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. பின்னர் அந்த விமானத்தில் பழுதுபார்க்கும் பணிகள் முடிந்து, சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது. இதனால் அந்த விமானத்தில் செல்லவிருந்த 157 பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.55 மணியளவில் புதுடெல்லிக்கு 157 பயணிகளுடன் ஏர்இந்தியா விமானம் புறப்படத் தயார்நிலையில் இருந்தது. அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் துவங்குவதற்கு முன், அதன் இயந்திர செயல்பாடுகளை விமானி ஆய்வு செய்தார். இதில், ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதே நிலையில் விமானத்தை இயக்க முடியாது என்பதை விமானி உணர்ந்து, இதுபற்றி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, புதுடெல்லி செல்லும் ஏர்இந்தியா விமானம் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், விமானத்திலேயே அனைத்து பயணிகளும் அமர வைக்கப்பட்டனர். விமானத்துக்குள் பொறியாளர்கள் ஏறி, அதில் ஏற்பட்டிருந்த இயந்திரக் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திரக் கோளாறுகள் சுமார் ஒரு மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டன.
பின்னர் புதுடெல்லி செல்லும் ஏர்இந்தியா விமானம் 157 பயணிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து காலை 7 மணியளவில் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திரக் கோளாறுகளை உரிய நேரத்தில் விமானி கண்டறிந்ததால், அந்த விமானம் ஆபத்திலிருந்து தப்பியது. மேலும், டெல்லி செல்லும் விமானம் சுமார் ஒரு மணி நேர தாமதத்தால், விமானத்தில் அமர வைக்கப்பட்டிருந்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
The post டெல்லி விமானத்தில் இயந்திர கோளாறு: புறப்பாடு தாமதம்; பயணிகள் அவதி appeared first on Dinakaran.