புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து டெல்லி சட்டப்பேரவை தேர்தலை, தேர்தல் ஆணையம் நேற்று நடத்தியது. மதுபான கொள்கை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்த டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தனது நேர்மைக்கு மக்கள் மீண்டும் சான்றளித்த பின்பே முதல்வராக வருவேன் என்ற சபதத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.