வாஷிங்கடன்: அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார் டொனால்ட் ட்ரம்ப். இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானியும் பங்கேற்கின்றனர். முன்னதாக, ட்ரம்ப் உடனான இரவு விருந்து நிகழ்வில் பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டு புடவையை அணிந்து சென்றுள்ளார் நீதா அம்பானி.
இந்திய பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த புடவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி நெசவு செய்துள்ளார். விஷ்ணுவைக் குறிக்கும் வகையில் இருதலைபக்‌ஷி, மயில் மற்றும் சொர்க்கவாசலை குறிப்பிடும் வகையிலான விலங்குகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், பழமையை போற்றும் வகையில் ஆபரணங்களை அணிந்து வந்துள்ளார். அதில் மாணிக்கம், வைரம், முத்து போன்றவை உள்ளன.
இந்த நிகழ்வில் டொனால்ட் ட்ரம்பை முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல துறைகளின் பிரபலங்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.