தஞ்சை: தஞ்சை அருகே இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன. 400 வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி மாதா கோவில் தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இன்று நடந்தது.இதில் தஞ்சை, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 600 காளைகள் அழைத்து வரப்பட்டன. 400 வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.
காலை 6.40 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்டிஓ இலக்கியா, வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதலில் கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, எவர்சில்வர் அண்டா, கட்டில், சைக்கிள், டிரஸ்சிங் டேபிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியை காண தஞ்சை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் குவிந்தனர்.
The post தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு 400 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.