*பழமை மாறாமல் மாட்டுவண்டி பயணம்
தஞ்சாவூர் : தஞ்சை வழியாக மாட்டு வண்டி மற்றும் பாத யாத்திரையாக பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அங்கு நாளை குல தெய்வ வழிபாடு நடத்துகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் தையல்நாயகி அம்மன் கோயில் உள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 2வது செவ்வாய்க்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம்.
அதன்படி பக்தர்கள் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்ற நிலையில் சிலர் மாட்டு வண்டிகளிலும் பயணத்தை தொடர்ந்தனர். மாட்டுவண்டியில் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சமைப்பதற்கு தேவையான பொருட்களையும் எடுத்துச்சென்றனர்.
பழமை மாறாமல் இருப்பதற்காக பழங்காலத்தில் மேற்கொண்ட இந்த மாட்டு வண்டி பயணத்தை தொன்று தொட்டு இன்றும் செய்து வருகின்றனர்.திருமயம், புதுக்கோட்டை, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக வைத்தீஸ்வரன் கோவில் சென்றடைகிறார்கள்.
இந்த பாத யாத்திரை குழுவினர் நேற்று தஞ்சை வந்தடைந்தனர். அப்போது பக்தர்களுக்கு பழம், குடிப்பதற்கு தண்ணீர், குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்பட்டன.
நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து புறப்படுட்டு 2வது செவ்வாய்க்கிழமை இங்கு வந்து சேருகின்றனர். குலதெய்வ வழிபாடாகவும், அதே சமயம் ஸ்ரீ தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றியும், நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தொடர்ந்து தாங்கள் வேண்டுதலுக்காகவும், வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய வெப்பிலை கட்டிய குச்சியினை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோயில் கொடிமரத்தில் செலுத்துவது வழக்கம்.
மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொ ண்டு செல்வார்கள். அந்த வகையில் நேற்று தஞ்சையில் இருந்து இந்த பாதயாத்திரை குழுவினர் புறப்பட்டனர். இவர்கள் நாளை (22ம் தேதி) வைத்தீஸ்வரன் கோவிலில் குல தெய்வ வழிபாடு நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தஞ்சை அருகே நாளை வைத்தீஸ்வரன் கோயிலில் குலதெய்வ வழிபாடு appeared first on Dinakaran.