சென்னை: தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்னையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மூளை சலவை செய்து வந்த முக்கிய ஏஜெண்டை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக பாப்புலர் பிரண்ட் அப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டது. இதுதொடர்பாக நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை மூலம் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு நிதி உதவி மற்றும் ஆட்கள் சேர்த்தது ைகப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியானது. அதேநேரம் இந்த ஆவணங்கள் மூலம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வரும் நபர்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக என்ஐஏ அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் செல்போன் செயலிகள் மூலம் தொடர்பில் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த அல்பாசித் (26) என்பவர் இருந்து வந்தது தெரியவந்தது. இதன் மூலம் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தொடர்பு கொண்டு அவர்களை மூளைச் சலவை செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஒரே நேரத்தில் அல்பாசித் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து கல்லூரி மாணவர்களின் வீடுகள் என மயிலாடுதுறை, சீர்காழி, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதேநேரம் சென்னை புரசைவாக்கம் அழகப்பா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அல்பாசித் வீடு மற்றும் மயிலாடுதுறையில் உள்ள அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. ஆட்களை அனுப்பும் முக்கிய ஏஜெண்டாக அவர் இருந்து வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அல்பாசித், புரசைவாக்கத்தில் உள்ள ‘கஸ்தூரி அம்புலன்ஸ்’ வாகன டிரைவராக பணியாற்றி கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து அல்பாசித்தை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவரை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ மண்டல அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தடை செய்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு சென்னையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை மூளைச்சலவை செய்த ஏஜெண்ட் கைது: என்ஐஏ அதிரடி appeared first on Dinakaran.