சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக அவரது தந்தை புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மூவரும் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், விழுப்புரத்தில் பெய்த கனமழையின் காரணமாக தொட்டி பராமரிக்கபடாமல் இருந்ததால் குழந்தை வழி மாறி சென்றதன் காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவித்தார். வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க கூடாது என்று காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளியின் தாளாளர் முதல்வர், வகுப்பு ஆசிரியர் ஆகிய மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கபட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
The post தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி தாளாளர், முதல்வர், ஆசிரியைக்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.