சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். மக்களின் அமோக ஆதரவில் 2021 சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவிகிதத்தை நிறைவேற்றி சாதனைகளை படைத்து வருகிறது.
அதை சகித்துக் கொள்ள முடியாத அமித்ஷா, திமுக அரசை மக்கள் விரோத ஆட்சி, தேசவிரோத ஆட்சி என்று கூறியதோடு, ஊழலைப் பற்றியும் குற்றச்சாட்டுகளாக கூறியிருக்கிறார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை நிகழ்த்திய கொடியவர்களுக்கு ஆதரவாக அமித்ஷா உள்ளிட்ட பாஜவினர் செயல்பட்ட நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசுவதற்கு அமித்ஷாவுக்கு என்ன உரிமை இருக்கிறது?
மேலும், அமித்ஷா ஊழலைப் பற்றி பேசுகிறார். சாத்தான் வேதம் ஓதுகிறது. இந்தியாவை 10 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருகிற பாஜ., கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செய்கிற உதவிக்கு கைமாறாக தேர்தல் பத்திர நன்கொடை என்கிற போர்வையில் நிதியை குவித்தது ஊழல் என்றால் வேறு எது ஊழல் என்பதை அமித்ஷா விளக்க வேண்டும். 2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆதாரபூர்வமாக கூறியபோது, அதுகுறித்து நரேந்திர மோடியும், அமித்ஷாவும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
அதேபோல, புதிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள், மும்மொழி திட்டத்தை ஏற்கவில்லை என்றால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2152 கோடியை தரமாட்டோம் என்று ஆணவத்தோடு கொக்கரிக்கிற ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக நலன்களுக்கு விரோதமாக செயல்படுவதற்கு அமித்ஷா என்ன பதில் சொல்லப் போகிறார்? இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக ஒட்டுமொத்த தமிழகத்தின் கோபத்திற்கு ஆளாகியுள்ள பாஜவை ஆயிரம் அமித்ஷாக்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழகத்தின் கோபத்திற்கு ஆளாகியுள்ள பாஜவை ஆயிரம் அமித்ஷாக்கள் சேர்ந்து வந்தாலும் காப்பாற்ற முடியாது: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.