சென்னை: “மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50% ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 விழுக்காட்டை அந்த மாநிலத்திற்கு வழங்கும் வகையில் நிதிப்பகிர்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாநிலங்களில் இருந்து கிடைக்கும் மத்திய அரசின் வரிவருவாயை மத்திய – மாநில அரசுகள் எந்த விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் விவாதிப்பதற்காக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-ஆம் நிதி ஆணையத்தின் குழு 4 நாள் பயணமாக சென்னைக்கு வந்திருக்கிறது. தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோருடன் நாளை இந்தக் குழு நடத்தவிருக்கும் கலந்தாய்வுகள் பயனளிக்க வேண்டும்; அதற்கான பங்களிப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பம் ஆகும்.