கோவை: தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் 123 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திராவில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு கடந்த 2024 மே மாதம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 3,063 யானைகள் இருப்பதாக அரசு அறிவித்தது. அதிகபட்சமாக நீலகிரி மலைப் பகுதிகளில் 2,253 யானைகள் வாழ்கின்றன. அடுத்ததாக கோவை வனப்பகுதியில் 323, ஆனைமலையில் 310, ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் 227, அகஸ்தியமலையில் 259 யானைகள் உள்ளன.
யானைகள் நோய் தாக்குதலால் இறப்பதும், மனிதர்கள் அமைக்கும் மின்வேலி, அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்தல், தந்தத்துக்காக கொல்லுதல் ஆகியவற்றாலும் யானைகள் மரணித்து வருகின்றன. அதேவேளையில் தமிழக அரசு யானைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.