விழுப்புரம்: “பாஜக – ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள்போராடி வருகிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாலையில் விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, டி.ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். இம் மாநாட்டில் சிறப்புரையாற்றி, பிரகாஷ்காரத் பேசியது: இந்துத்துவ வகுப்புவாத சித்தாந்தத்தை பதிவு செய்யும் நோக்கில் பாஜகவினர் செயல்படுகின்றனர்.