சென்னை: தமிழகத்தில் வறண்ட வானிலை காரணமாக இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 102 டிகிரியும், தமிழக கடலோரப் பகுதிகளில் 98 டிகிரியும், மலைப் பகுதிகளில் சராசரி வெப்பமும் நிலவியது. அதன் தொடர்ச்சியாக வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி, கரூர், ஈரோடு 103 டிகிரி, திருப்பத்தூர் 101 டிகிரி, தர்மபுரி, மதுரை, திருத்தணி 100 டிகிரி, சென்னை 99 டிகிரி வெயில் நிலவியது.
இந்நிலையில், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்நிலை நிலை கொண்டுள்ளது. அத்துடன் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நேற்று தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதன் ெ தாடர்ச்சியாக இன்று முதல் 29ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. ஒரு சில இடங்களில் சற்று உயரவும் வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் இன்ற முதல் 26ம் தேதி வரை அதிகமாக இருக்கும். அதன் காரணமாக சில இடங்களில் அசவுகரியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி முதல் 99 டிகிரி வரை இருக்கும்.
The post தமிழகத்தில் இயல்பைவிட 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்: 7 மாவட்டங்களில் சதமடித்தது appeared first on Dinakaran.