சென்னை: “இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அதிமுக – பாஜக தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான். பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.” என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக நேற்று, ‘‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என்று சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.