சென்னை: எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை என்றும், தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழியை அனுமதிக்க மாட்டோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை போராட்டம் தொடரும் என உறுதி அளிக்கிறேன். ‘இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எல்லாம் இந்தியை ஏற்றுக்கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?’ என கேட்கிறார்கள்.
தாய்மொழியை அடிப்படையாகவும், ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும் கொண்டு அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையைத் தமிழ்நாடு கடைப்பிடித்து வருவதால்தான் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தமிழ் மொழியை ஆதிக்க மொழிகளிடம் அடிமைப்படுத்திவிடாமல் காத்து-வளர்த்து, தமிழர்களின் திறனை மேம்படுத்தியதன் விளைவாகத்தான் தமிழ்நாடு இன்று பல இலக்குகளிலும் உயர்ந்து நிற்பதை இந்திய ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை.
அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்ப தில்லை என்பதால்தான் இருமொழி கொள்கையை கடைபிடிக்கிறோம். மொழிக்கொள்கையில் தமிழ்நாடு வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களும் உணர்ந்து வருவதுடன், அதை உரக்க வெளிப்படுத்தும் காலமாகவும் இது அமைந்துள்ளது.
இந்த மண்ணில் இடக்கினைச் செய்ய நினைக்கும் எதிரியாக ஆரியமோ, ஆதிக்க இந்தியோ- சமஸ்கிருதமோ எதுவாக இருந்தாலும், எத்தனை கோடியை ஒன்றிய அரசு கொட்டிக் கொடுத்தாலும் அவற்றை ஏற்க மாட்டோம். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றபோது, “10ஆயிரம் கோடி தந்தாலும் இந்தியைத் திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்” என உறுதியுடன் தெரிவித்தேன்.
இதனைக் கேட்ட கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை, “ஒன்றிய அரசு நிதி தரலைன்னா என்ன, நான் தருகிறேன்” என்று தன்னுடைய சேமிப்புப் பணமான 10 ஆயிரம் ரூபாயை காசோலையாக அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார். ‘தமிழ் வாழ்க’ என்று தன் உணர்வையும் காணொலியாக வெளியிட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு. ஒரு நன்முகை அல்ல, ஒரு கோடிக்கும் அதிகமான இளம் நன்முகைகள் இந்த மண்ணில் இருக்கிறார்கள்.
இளம் வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தாய்மொழிப் பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்பதாகும்.
இன்றும் அதனை எதிர்க்கிறோம். ‘இந்தி படிக்காதே!’ என்று யாரையும் தடுக்கவில்லை. ‘இந்தியை எங்கள் மீது திணிக்காதே!’ என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. இத்தனை உறுதியாக ஏன் எதிர்க்கிறோம் இந்தித் திணிப்பை என்பதை எதிரிகளுக்காக மட்டுமல்ல, இளந்தலைமுறையினரும் புரிந்து கொள்வதற்கான முதல் மடல் இது. தொடர்ச்சியாக மடல் எழுதுவேன். தமிழ்காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனான நான் என்றும் முன் நிற்பேன்.
* மொழிக்கொள்கையில் தமிழ்நாடு வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களும் உணர்ந்து வருவதுடன், அதை உரக்க வெளிப்படுத்தும் காலமாகவும் இது அமைந்துள்ளது.
The post தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழியை அனுமதிக்க மாட்டோம்: எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை, தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.