தமிழ் திரைப்பட இயக்குநர்களான பீம்சிங்கில் இருந்து, கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், சமீபத்தில் அட்லி என பலர் இந்தியில் படம் இயக்கியுள்ளனர். சமீபகாலமாகத் தமிழ் இயக்குநர்களுக்கு இந்தித் திரைப்பட வாய்ப்பு அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கெனவே இந்தி சினிமாவின் டாப் ஸ்டார்களான ஆமிர்கான், அக் ஷய்குமார் நடித்த படங்களை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது சல்மான் கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.
தமிழில் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் அட்லி, ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கி இருந்தார். நயன்தாரா, விஜய் சேதுபதி என பலர் நடித்த இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து அவர் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்ட இந்திப் படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதிலும் ராஷ்மிகா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.