சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் குறித்து கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: “எல்லோருக்கும் எல்லாம்” எனும் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதாக பட்ெஜட் அமைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும். தமிழ்நாடு வெற்றி நடைபோட நிதிநிலை அறிக்கை பாதை அமைத்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய வரிபகிர்வை தர மறுத்தாலும், தமிழக முதல்வர் திறமையாக கையாண்டு ஒரு நல்ல நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், படகுகளை பறிமுதல் செய்தால் அதற்கான உரிய நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்க தகுந்த அம்சங்களாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: ஈட்டிய விடுப்பு பணப் பலன் திட்டத்தை அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் பெறலாம் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து, தனது கொள்கையை ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து வரும் நிலையிலும் இரு மொழிக் கொள்கையில் உறுதி காட்டி வருவதும், வருவாய் பற்றாக்குறையை குறைத்திருப்பதும் வரவேற்றதக்கது.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: நடப்பு நிதியாண்டில் ஐந்து லட்சம் மனைப்பட்டாக்கள் வழங்கப்படும் எனும் அறிவிப்பும், நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தியிருப்பதும் நல்ல அம்சம். நிதி நிலை மீதான விவாதத்திற்கு பிறகேனும் விடுபட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு, அரசு மருத்துவர்களுக்கான ஊதியம் மற்றும் பதவி உயர்வு, முதியோர் உதவித் தொகை உயர்வு போன்றவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: திருக்குறளை மொழி பெயர்க்க இன்னும் 45 மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும் திட்டம் மட்டும் தான் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கீழ்வேளூர் நாகை மாலி (மார்க்சிஸ்ட்), பண்ருட்டி வேல்முருகன்( தவாக), தளி ராமசந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோவில்), ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ (மனித நேய மக்கள் கட்சி தலைவர், திருச்செங்கோடு ஈஸ்வரன் (கொமதேக, சமத்துவ மக்கள் கழகம் எர்ணாவூர் நாராயணன், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post தமிழ்நாடு அரசு பட்ஜெட் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து appeared first on Dinakaran.