சென்னை : தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்கள் விற்பனையில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் மின்சார கார் சந்தையை பிடிக்க மும்பையில் தனது முதல் ஷோரூமை டெஸ்லா நிறுவனம் திறக்க உள்ளது. மின்சார கார் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க தென் மாநிலங்களை டெஸ்லா தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஒரு புறம் , தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறுபுறம், குஜராத் மற்றும் மராட்டியத்தில் கார் தொழிற்சாலையை அமைக்க டெஸ்லா நிறுவனம் திட்டம் என ஒரு சில வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன. இதனிடையே சொகுசு, மின்சார கார்களின் தேவை தென்னிந்தியாவில் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மின்சார கார் தேவை, நிபுணர்கள் கருத்து அடிப்படையில் கார் ஆலையை எங்கு அமைப்பது என முடிவு எடுக்க டெஸ்லா திட்டம் வகுத்து வருகிறது. இதற்கு மத்தியில் இந்தியாவில் டெஸ்லா கார் ஆலை அமைக்க எலான் மஸ்க் போட்டுள்ள திட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
டிரம்ப் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில்,‘‘இந்தியாவில் எலான் மஸ்க் ஒரு காரை விற்பது சாத்தியமற்றது. நாட்டின் வரிகளைத் தவிர்ப்பதற்காக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஒரு தொழிற்சாலையைக் கட்டினால், அது அமெரிக்காவிற்கு இழைக்கப்படும் அநீதி.’’ என்றார்.
The post தமிழ்நாடு, ஆந்திராவில் டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல்!! appeared first on Dinakaran.