ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் தேவைகளுக்காக அந்நிய தாவரங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு வனப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. இந்த தாவரங்கள் உள்ளூர் தாவரங்களின் வளர்ச்சிக்கும், பல்லுயிர் பாதுகாப்பிற்கும் இடையூறாக இருக்கின்றன. அத்தகைய அந்நிய தாவரங்களை அகற்றும் பணி வனத்துறையால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அந்நிய தாவரங்களில் விரைவில் பரவும் தன்மை கொண்ட நான்கு தாவரங்களான சீமைக்கருவேல், உண்ணிச்செடி, சீமைக் கொன்னை மற்றும் சீகை மரம் ஆகியவற்றை வனங்களில் இருந்து முற்றிலும் அகற்றுவதற்கும் அப்பகுதிகளில் உள்ளூர் வனவளத்தை மீட்பதற்கும் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழ்நாட்டில் தமிழக அரசால் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
தொழில் வளம் பெருக, பெருக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று தான். இருப்பினும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்க்க மரம், செடி, கொடிகளை வளர்க்கும் சோலை காடுகளை ஏற்படுத்த வேண்டியதும் காலத்தின் அவசியமாக மாறிப்போயிருக்கிறது. இதை நோக்கமாக கொண்டே தமிழக அரசு அமெரிக்கா நிதியுதவி திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கிராம அளவில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில், வனம் சார்ந்த பலன்கள் கிடைக்கும் வகையில் மரகத பூஞ்சோலை எனப்படும் சிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தலா ₹25 லட்சம் வீதம் 100 கிராமங்களில் ₹25 கோடி மதிப்பில், மரகத பூஞ்சோலைகள் அமைக்க தமிழக வனத்துறை உத்தரவிட்டது.
அதன்படி ஒவ்வொரு வனச்சரகத்துக்கு உட்பட்டு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஒரு ஹெக்டர் அதாவது 2.47 ஏக்கர் நிலத்தில் பூஞ்சோலை உருவாக்கப்படும். அங்கு, பழம் தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள், மலர் தரும் செடிகள் ஆகியவற்றை நட்டு வளர்த்து, வனத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்படும். அந்த பூஞ்சோலைக்குள் நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளும் செய்யப்பட்டது. பின் அதை பராமரிக்கும் பொறுப்பு அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக பணிகள் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட மரகத பூஞ்சோலை பூங்காக்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து அடுத்த கட்டமாக மரகத பூஞ்சோலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று துறை சார்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப வாழ்க்கை முறை மாறி வருகிறது. மனிதனின் சுய நலத்துக்காக இயற்கையின் கொடையான மரங்கள் சமீபகாலமாக பெருமளவில் அழிக்கப்பட்டு வருகிறது. மரங்கள் குறைந்து வருவதால் காலநிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் மனிதன் மட்டுமல்லாது வன உயிரினங்களும் சிரமத்துக்குள்ளாகின்றன. இந்நிலையில் மரங்களை வளர்க்கவும், காடுகளை மேம்படுத்தவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழக வனத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் பசுமை மேம்படுத்தவும், காடுகளை உருவாக்கவும் மரகத பூஞ்சோலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 100 மரகத பூஞ்சோலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்காக நடைபாதைகள், இருக்கைகள் மற்றும் விண்டேஜ் விளக்குகள் கொண்ட குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வசதி, சுகாதார வளாகங்கள், வாகன நிறுத்துமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத நிலத்தை சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் இந்த பூங்காவை பயன்படுத்துகிறார்கள்.
வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பூங்காவும் ₹25 லட்சம் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு வகையான மரங்கள் நடப்படுவதால் இயற்கைக்கு அரணாக இருக்கும். மக்களுக்கு சுத்தமான காற்றும் கிடைக்கும். தற்போது 2ம் கட்டமாக 100 கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும். தொடர்ந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இயற்கையை நோக்கி நகரும் மக்கள்
இன்றைய சூழலில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை. சுத்தமான நீரைப் பருக முடியாத நிலை உள்ளது. நீர், நிலம் இவ்விரண்டுமே தனது தன்மையை இழந்து வருகிறது. நீர், மணல், வனங்கள், வன உயிர்கள், புல்வெளிகள், தாதுக்கள் என எண்ணற்ற இயற்கை வளங்களை நாம் பெற்றுள்ளோம். மனித இனத்தின் பெருங்கொடை இயற்கை வளங்கள்தான். மனிதன் இயற்கையை சார்ந்தே வாழ்ந்து வருகிறான். எனவேதான், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம் முன்னோர்கள் அவற்றை தெய்வமாக வழிபட்டனர். ஆனால், இயற்கைக்கு மாறாக அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல், மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர் நிலைகள், வறண்ட நீர் நிலைகள் என இயற்கை வளங்கள் சுருங்கி வருகின்றன. இதனால் மக்கள் மன அமைதிக்கு இயற்கையை நோக்கி நகரும் நிலைக்கு மாறி உள்ளனர். இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
2 ஆண்டுகள் வனத்துறை பராமரிக்கும்
மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மரகத பூஞ்சோலைகள் அமைத்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தை தவிர்த்து வருவாய்த்துறைக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சொந்தமான இடத்தையும் தேர்வு செய்து அதில் மரகத பூஞ்சோலை அமைக்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்கா அமைத்து முதல் 2 ஆண்டுகள் வனத்துறை பராமரிக்கும். அதன்பிறகு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் பூங்காவை பராமரிக்க ஒப்படைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
27 நட்சத்திரங்களுக்கும் மரங்கள்
மரகத பூஞ்சோலையின் சிறப்பு அம்சமாக 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்கள் அங்கு நட்டு பராமரிக்கப்பட உள்ளன. குறிப்பாக ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு வகை மரம் இருக்கிறது. அஸ்வினி நட்சத்திரத்துக்கு எட்டி, பரணி-நெல்லிக்காய், கார்த்திகை-அத்தி, ரோகிணி-நாவல், மிருகசீரிஷம்-கருங்காலி, மகம்-ஆலமரம் என 27 மரங்கள் பூங்காவில் நடப்படும். தோட்டத்தில் சந்தனம், மகாகனி, வேங்கை, பூவரசன், புளி, வேம்பு, புங்கை, அரசன் உள்ளிட்ட மரக் கன்றுகளும், கொய்யா, மாதுளை, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பலன் தரும் மரங்களும், அலங்காரச் செடிகளும் நடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு வனத்துறையின் புதிய முயற்சிக்கு வரவேற்பு; மரகத பூஞ்சோலைகளாகும் பயன்படுத்தப்படாத நிலங்கள்: 2ம் கட்டமாக 100 கிராமங்களில் இடம் தேர்வு செய்யும் பணிகள் appeared first on Dinakaran.