சென்னை: நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. இதையும் தாண்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்கமாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் அரசினர் தனி தீர்மானம் ஒன்றை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
மதுரை மேலூரில் டெண்டர் விடப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சரும் ஒன்றிய அரசுக்கு அடுத்தடுத்து கடிதம் எழுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்கின்ற தகவல் இடம்பெறவில்லை.மத்திய அரசு 2023ம் ஆண்டு கனிம வளங்களை எடுப்பது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
அப்போதே அதனை நிறைவேற்ற விடாமல் தி.மு.க. எம்.பி.க்கள் முழு அளவில் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதனை தவிர்த்துவிட்டு 10 மாதங்கள் காத்திருந்து எதிர்ப்பை தெரிவித்து உள்ளீர்கள். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு டெண்டர் கோரப்பட்டபோது தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று ஒன்றிய அரசு தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்திய பிறகு தமிழக அரசு வேறு வழியின்றி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.
அமைச்சர் துரைமுருகன்: டங்ஸ்டன் சுரங்கத்துக்கு டெண்டர் விடும்போது, கனிமவள சட்டத்தில் ஒன்றிய அரசு ஒரு திருத்தம் கொண்டுவந்து, டெண்டர் விடும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு மாற்றிக் கொண்டனர். சுரங்க அதிகாரம் வழங்கும் உரிமை மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. மாநில அரசு என்ன ஒன்றிய அரசின் வேலைக்காரர்களா?. இது தொடர்பாக, நான் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினேன்.
அதில், நில உரிமை மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, சுரங்க அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசோ, எங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது, நீங்கள் ஒத்துழைப்பு தாருங்கள் என்று கூறிவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். எடப்பாடி பழனிசாமி: நீங்கள் கடிதத்தில் உள்ள விவரத்தை இப்போதுதான் தெரிவிக்கிறீர்கள். அதை நீங்கள் வெளியிட்டால்தானே எல்லோருக்கும் தெரியும்.
துரைமுருகன்: உங்கள் ஆட்சியில் பிரதமருக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதுனீர்கள். அதை அப்போது வெளியிட்டீர்களா?. முதல்வர் மு.க.ஸ்டாலின்: டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலூர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தியபோது, அங்கு மாவட்ட அமைச்சர் மூர்த்தி சென்று, ‘இது தொடர்பாக முதல்வர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்’ என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதுவும் தெரியவில்லை என்று சொன்னால் எப்படி?. நாங்கள் கடிதம் எழுதியிருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி: சுரங்க ஏலம் வரும்போது டெண்டர் போடப்பட்டு 10 மாத காலம் என்ன செய்தீர்கள். அப்போதே தடுத்து நிறுத்தியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?. முதல்வர் மு.க.ஸ்டாலின்: வேகமாக பேசுவதால் சாதித்ததாக நினைக்க வேண்டாம். நாடாளுமன்ற அவையை ஒத்திவைக்கின்ற அளவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி: கனிம திருத்த சட்டம் 2023ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அப்போதே நாங்கள் அதை எதிர்த்தோம்.
எடப்பாடி பழனிசாமி: சட்டம் அப்போது நிறைவேற்றப்பட்டுவிட்டது. இப்போது தீர்மானம் கொண்டுவந்தால் எப்படி?.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அன்றைக்கு நாங்கள் எதிர்த்தோம். ஆனால், பாஜவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்ததால் நிறைவேற்றிவிட்டார்கள். இப்போது டெண்டர் விட்டாலும் தமிழ்நாட்டில் அனுமதி தர வாய்ப்பே இல்லை. (இந்த நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி எழுந்து, ஆவேசமாக பேசினார். பதிலுக்கு அமைச்சர் துரைமுருகனும் ஆவேசமாக பேசிக் காட்டினார். இதனால், மேலும் ஆவேசம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைமுருகன் ஆ.. ஊ.. என பேசுவதாக குற்றம் சாட்டினார்)
அமைச்சர் மூர்த்தி: கிராம சபை கூட்டத்தில் நான் பங்கேற்று, தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை கூறினேன். அதில், அதிமுக உறுப்பினர் பெரியபுல்லானும் கலந்துகொண்டு, சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். நானும் உடனே தனி தீர்மானமாக கொண்டுவரப்படும் என்று தெரிவித்தேன். முதலில் அங்கு பிரச்னை இருந்தது. இப்போது அங்கு போராட்டம் எதுவும் நடைபெறவில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவர முடியாது. நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம்.
துரைமுருகன்: முதல்வர் தனது நிலையை 3 முறை பிரகடனப்படுத்திவிட்டார். அதற்கு பிறகும் இவ்வாறு நடந்து கொண்டால் எப்படி?. நீங்கள் வேதாந்தா நிறுவனத்திடமே பேசியிருக்கலாம். (இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மேலும் ஆவேசம் அடைந்தார்)
அமைச்சர் ரகுபதி: எதிர்க்கட்சி தலைவர் அரைத்த மாவையே மீண்டும் அரைக்கிறார். எடப்பாடி பழனிசாமி: நான் முக்கியமான பிரச்னை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றேன். அமைச்சர் ஏளனம் செய்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உங்களின் பார்வையில் நாங்கள் சுரங்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக தெரியலாம். ஆனால், அதுபோன்று நாங்கள் எந்த அலட்சியத்தையும் காட்டவில்லை. எங்களுடைய எதிர்ப்பை கடுமையாகவே பதிவு செய்துள்ளோம். நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. இதையும் தாண்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்கமாட்டேன். எனவே, இந்த தீர்மானத்துக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள்.
துரைமுருகன்: ஏலம் விடும் அதிகாரம் மட்டும்தான் ஒன்றிய அரசுக்கு உள்ளது. அதை குத்தகைக்கு விடும் அதிகாரம் தமிழக அரசுக்கே உள்ளது. அதனை முதல்வர் அனுமதிக்கமாட்டார். ஒன்றிய அரசை எதிர்க்கும் வல்லமை அவரிடம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தொடங்க அதிமுக அனுமதி அளிக்காது. எனவே, இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
The post தமிழ்நாட்டின் முதல்வராக நான் இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை வர விடமாட்டேன்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் appeared first on Dinakaran.