சென்னை: தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என ரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையது அல்ல என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கு 2-ம் நிலை தேர்வு மார் 19-ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு வெளி மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1,500 கி.மீ.க்கு அப்பால் மையம் ஒதுக்கியதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் ஒதுக்கிய தேர்வு மையத்தை மாற்ற ரயில்வே தேர்வு வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்வு மையங்களை மாற்றக் கோரி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்துக்கு ரயில்வே தேர்வு வாரிய தலைவர் பிரதீபா பதிலளித்துள்ளார். அதில்; ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டியிருப்பதால் தேர்வு மையங்களை மாற்ற முடியாது. அதே தேதியில் வேறு ஒரு ரயில்வே தேர்வை இருப்பதால் தமிழ்நாட்டினருக்கு தமிழ்நாட்டு மையங்களில் இடம் அளிக்க முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
ரயில்வே வாரிய தலைவரின் விளக்கத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; ரயில்வே தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம். இந்தியாவிலேயே அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என இரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல. தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்ட கத்துகிறது. இந்தியாவிலேயே அதிக கல்லூரிகள் இருக்கும் தமிழ்நாட்டில் 6000 பேருக்கு தேர்வு மையம் அமைக்க முடியவில்லை என இரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல.
இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியை தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா? இப்படி தமிழ்நாடு தேர்வர்கள் வெளி மாநிலங்களுக்கு பந்தாடப்படுவதை ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் தொடர்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை எழுப்பியுள்ளேன். உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என ரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையது அல்ல: சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.