சென்னை: தமிழக தனியார் பள்ளிகளில் 30 லட்சம் பேர் இந்தி படிக்கிறார்கள் என்று தவறான கருத்தைப் பரப்ப முயல்வது தவறு என அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு குழு பதில் அளித்துள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையும் அதில் இடம்பெற்றுள்ள மும்மொழி கொள்கையும் தமிழக அரசியலில் சர்ச்சையாகி உள்ளது. ஆனால், தமிழகத்தில், பாஜகவைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், பா.ஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்கும்போது, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலையின் இந்த கருத்து தவறானது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு கூறியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: 30 லட்சம் பேர் மும்மொழி கற்கிறார்கள் என தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதற்கு எந்தத் தரவும் இல்லை. அரசுப் பள்ளிக்கு ஒரு பாடத்திட்டம், தனியாருக்கு ஒரு பாடத்திட்டம் என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான சீரான கல்வியைக் கொடுக்கும் நோக்கத்தில், அப்போதைய முதல்வர் கலைஞர் சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தார். தமிழ்நாட்டில் கட்டாய மொழித்திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாடு அரசு, எந்த மொழியையும் விரும்பி படிக்க எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. அவ்வகையில் தனியார் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயம் என்ற சூழல் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 58,000.
அதில் தனியார் பள்ளிகள் சுமார் 12,690. இதில் சிபிஎஸ்இ பள்ளிகள் வெறும் 1,835 மட்டுமே. சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர கட்டாய இந்தி பாடம் எங்கும் இல்லை. பிற தனியார் பள்ளிகளில் எந்தப் பொதுத் தேர்விலும் இந்தி கிடையாது. ஆக, தமிழ்நாட்டில் வெறும் 3.16% பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயமாக உள்ளது. சிபிஎஸ்இ, பிற மாநிலங்களில் மாறிச் செல்ல வாய்ப்புள்ள குழந்தைகளுக்காக நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்ட திட்டம். எங்குச் சென்றாலும் ஒரே பாடத்திட்டத்தைத் தொடர அது உதவும். அதன் நோக்கம் வேறு. நிலை இவ்வாறு இருக்க, பல லட்சம் மாணவர்கள் இந்தி படிப்பதாக மனம் போன போக்கில் ஒரு தப்புக் கணக்கை உருவாக்கி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்று தவறான கருத்தை அண்ணாமலை பரப்ப முயல்வது தவறு. இவ்வாறு பதிவில் குறிப்பிட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 30 லட்சம் பேர் இந்தி கற்கிறார்கள் என்பதற்கு எந்த தரவும் இல்லை: அண்ணாமலை கருத்துக்கு அரசின் தகவல் சரிபார்ப்பு குழு மறுப்பு appeared first on Dinakaran.