சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.2489 கோடி அதிகரித்துள்ளது. 2024-25 ஆண்டில் டாஸ்மாக் நிறுவன மொத்த வருமானம் ரூ.48.344 கோடியாக அதிகரித்துள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. 2021 – 2022ம் நிதியாண்டில் ரூ. 36,050 கோடியும், 2022 – 2023ம் நிதியாண்டில் ரூ.44,121 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2023 – 2024ம் நிதியாண்டில் ரூ.45,855 கோடியும், 2024 – 2025ம் நிதியாண்டில் ரூ.48,344 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி 2023 – 2024ம் நிதியாண்டை விட, 2024 – 2025ம் நிதியாண்டில் ரூ.2489 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்ததன் மூலமாக 2024-25 -ஆம் ஆண்டில் மார்ச்.31 வரை சிறப்புக் கட்டணமாக அரசுக்கு ரூ.62.88 கோடி மற்றும் சேவைக் கட்டணமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு ரூ.32.52 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மூலம் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், வெளி நாடுகளுக்கு பீர் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளது.
கடந்த 2024 – 2025 ஆம் ஆண்டில் மார்ச் 31 வரை மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பிற நாடுகளுக்கு 21,80,465 பெட்டிகள் பீர் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.777.07 இலட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பீர் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இணைய வழியாக வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகரிப்பு! appeared first on Dinakaran.